Friday, December 14, 2007

கோயில் சோத்துக்கு.....

வாழ்க்கையிலே பல பேரைப் பார்க்கிறோம். நம்மைச் சுற்றிய உலகின்நிகழ்வுகளைக் காண்கிறோம், வாழ்க்கை நிலையாமை பற்றி நமது முன்னோர்கள்சொல்லாதது இல்லை. ஆனால் வாழ்க்கையின் வேகத்தில் நிலையாமையைநம் மனத்தில் நிற்பது இல்லை. திருவள்ளுவரும், திருமூலரும், இன்னபிற நமது சேயோர்களும் சொன்னதெல்லாம் நமக்கு நினைவுக்கு வராவிடிலும், இந்தப் பழமொழி நினைவில் நிற்கக் கூடும் என்று எண்ணுகிறேன்.

பழமொழிகளைப் படித்து விட்டு என் அருமை நண்பர் ஒருவர் அனுப்பிவைத்த பழமொழி இது:

"கோயில் சோத்துக்கு குமட்டிண தேவடியா
காடிச் சோத்துக்குக் கரணம் போடுறா"

(காடி = மாடு குடிக்கும் தண்ணீர்/கழுநீர்த் தொட்டி)

தேவடியா என்பதற்கு வேசி என்ற பொருளை மட்டும் கொண்டுஇதைப் படித்தால் இதன் ஆழம் புரியும்.

வேசி புகழில் இருக்கும் போது அவளிற்கு இருக்கும் வருவாயும்,வாழ்க்கை உயர்வும்(?) கோயிலில் போடப்படும் சோற்றைக் கண்ட/கேட்டமாத்திரத்தில் குமட்டச் செய்யுமாம். "உவே...." என்று மூக்கைப்பிடிக்க வைக்குமாம்.
அதே அவளின் சந்தை மலிவாகி இல்லாமல் போன காலத்தில்மாட்டுத் தொட்டியில் ஊற்றப்படும் கழுநீர், வடி கஞ்சி, வடி கஞ்சியோடுவிழுந்த சோறு, பழைய சோறு ஆகியவவை கிடைத்தாலே போதும்என்று, அதற்கே கரணம் போடத் தயாராக இருப்பாளாம்.

வேசிக்கு மட்டுமல்லாமல் இன்றைக்கெல்லாம் திடீர்-நவ-நாகரீகச் சூழல் அல்லது வேலை, அல்லது புகழ் போன்ற இவற்றில் சிக்கிக் கொள்கிற சில் ஆடவர் பெண்டிருக்கும் இப்பழமொழியைப் பொருத்திப் பார்க்கலாம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Thursday, November 29, 2007

மயிரைக் கட்டி....

"மயிரைக் கட்டி மலையை இழுப்போம்...
வந்தால் மலை - போனால் மயிரு"

இந்தப் பழமொழி/சொலவடையை தந்தை பெரியார்
பயன்படுத்தியிருக்கிறார் என்று அறிந்திருக்கின்றேன்.

இதே கருத்தில்லாவிடிலும், இதன் வகையில்ஒரு பழமொழி:

"பட்டா படையாச்சி...படாட்டி மானியாச்சி".

மானின்னா என்னன்னு கேட்கிறீர்களா?

நாம் தயங்கித் தயங்கி சொல்லவோ
எழுதவோசெய்கிறோமே "ஆண்குறி" என்று - அதற்கானசொல்.

சரி மானி என்றால் என்னன்னு சொல்லியாயிற்று.

அப்ப படை என்றால் என்ன என்று யோசித்துப்
பொருள் புரிந்து கொள்ளுங்கள் :-)

ஆத்துகிட்டே கோவிச்சுக்கிட்டு.....

சின்ன சின்ன கோபங்கள், வெறுப்புகள்,
ஏலாமைகள் ஒருவனைத் தூண்டி விடும்போது,
அல்லது சின்னச் சின்ன எரிச்சல்கள்,
ஏரணம் இல்லாத தயக்கங்களும்,
கோபங்களும் ஒருவரை ஆளும்போது,
தனக்குப் பிடித்த ஒன்றாக இருந்தாலும்
அதை விட்டுத் தள்ளிப் போய்விடுகிறார்கள்.

அதனால் இழப்பிருப்பினும் வீம்புக்கென்றே
அதனை இறுமாப்பாக தள்ளிவிடுகிறார்கள்.

இது காலம் கடந்து யோசிக்கும்போது
எவ்வளவு முட்டாள்தனம் என்பதைப்
பல நேரங்களில் உணர்த்துவதாக இருக்கும்.

அம்மாதிரியான சூழலில் இந்தப் பழமொழியை
எண்ணிக் கொண்டால் சிரிப்பு வந்து விடுவது மட்டுமல்ல சிந்தனையும் வந்துவிடத்தான் செய்கிறது.

"ஆத்துகிட்ட கோவிச்சுக்கிட்டு
சூத்து கழுவாம இருந்தால் எப்படி?"

என்று ஒரு முறை வறட்டு வீம்பின் பிடியின் மனம் இருக்கும் போது சொல்லிப் பாருங்கள். ஒரு வேளை வீம்பு விலகினாலும் விலகிவிடும்.

ஆத்துகிட்ட = ஆறுடன்.நீரோடும் ஆற்றின் மருவல்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Monday, September 17, 2007

மேயிற மாட்டை....

யாரேனும் தொலைபேசினால் "busy" யா இருக்கிங்களா... என்பார்கள்.
"busy" யா இல்லைன்னா பேசலாம்னு பார்த்தேன் என்பார்கள்.

என் அன்புக்குரியவர் ஒருவர் தொலைபேசினார். வேலையாய் இருக்கியா
என்றார். கொஞ்சம் வேலையாத்தான் இருக்கேன்... இருந்தாலும் பரவாயில்லல
சொல்லுங்க... என்றேன்.

இல்லை இல்லை அப்புறம் தொலைபேசறேன்....ஏன்னா
"மேயிற மாட்டை நக்கற மாடு கெடுக்கக் கூடாதில்ல" என்றார்...

எனக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.

நெடுநேரம் இப்பழமொழி என்னை சிரிப்பில் ஆழ்த்தியது.

"மேயிற மாட்டை நக்கற மாடு கெடுக்கும்" என்பது பழமொழி போலும்!

நல்ல தமிழில் சொன்னால்

"மேய்கின்ற மாட்டை நக்குகின்ற மாடு கெடுக்கும்"

சிரிப்பு குறைந்ததும் இந்தப் பழமொழியைப் பயன்படுத்தும்போது
யாரிடம் பார்த்துப் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம் என்றும்
தோன்றியது.

இதற்கு விளக்கம் தேவையில்லை.

நான் இதை அறிந்ததில்லை. எனக்கு இது புதிது.
ஆனால் சுவையான ஒன்றாக இருந்தது.